Saturday, April 24, 2010

மழையின் சங்கீதம்












பிரியமானவளே


சில்லென்ற சாரலுடன் மழை
சிறு தவளைகளின் ரீங்காரம்...

விளக்கோடு விளையாடும்
விட்டில் பூச்சிகள்.............

மேகக் கூட்டங்களின் சங்கீதத்திற்கு
இடியும் மின்னலும் இசை மீட்டுகின்றன...

என் பிரியமானவளைத் தாலாட்டப்
பிறக்கின்றன மழையின் குழந்தைகள்....

ஒற்றைக் குடையில் நான் மட்டும் போகும் போது
வீதியோரத்து மின்விளக்கெல்லாம் கண்ணடித்து கதை சொல்லும்...

காத்திருந்த நாட்கள் கடந்து
காதலியுடன் வாழும் நாட்கள் வரும் என...

காத்திருக்கிறேன் நானும் மழையின் சங்கீதத்தை கேட்டபடி
பிரியமானவளுடன் வாழும் நாட்களை எண்ணி...

Wednesday, November 25, 2009

கண்ணீரில் கரையும் கல்லறை தெய்வங்கள்





கருக்கொள்ளும் போதே கல்லறைத்
தெய்வங்களாகக் கடவது என
காலன் சொன்னானோ என்னவோ
கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற
காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில்
வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி

கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து
கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை
காசுக்காக விற்றுவிட்டு உங்கள்
கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும்
கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம்
இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும்
சிறு கடுகளவேனும் கருணை கொண்டு

கார்த்திகைப் பூக்களை காலால் நசுக்குவது போல்
கல்லறை தெய்வங்களையும் சிறு
கணப் பொழுதுடன் மறந்துவிடுகிறோம் எம்
களியாட்டங்கள் தொடர்வதற்காய்

விளக்கிலே பட்டு வீழ்ந்துபோகும்
விட்டில்கள் போல உங்கள்
வீரம் விளைந்த விடுதலை வேட்கையும்
வீணர்களால் வீணாய்ப் போய்விட்டதே

உங்கள் பாதம் பட்டு சேதிகள் சொன்ன
பற்றைக்காடுகள் கூட பாசறைப் புலிகளின்
பரிதாபங்கண்டு இரங்கற்பா இசைக்கும்
இதயம் கனத்து...

எங்குபோய்த் தேடுவது எம் குலவிளக்குகளை
கார்த்திகை நாளில் காற்றுக் கூட
கானமிசைக்கும் எம் மாவீரர் நினைவைச் சுமந்து
ஆறுமணிக்கு ஒலிக்கும் ஆலய மணியின் ஓசையில்
உம் ஆன்மாக்களின் துடிப்பு நாதமாய் கேட்கும்

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்
பேழைகளே பாடல் ஒலிக்கும் போது உயிரைப் பிழியும்
வலியை உணர்ந்தோம் உங்களுக்காய் ஏற்றப்படும்
ஒவ்வொரு தீபமும் எம் உள்ளத்தை உருக்கி
நெருப்பாக்கும் உண்மையை உணர்ந்தோம்

உங்கள் துயிலுமில்லத்தில் பொழியும் மழைகூட
உங்கள் கண்ணீராய் உணர்ந்தோம் அதுவே
எம்மை ஆசீர்வதிப்பதாய் நினைத்தோம் இன்று
அதே மழை நாங்கள் செய்த பாவத்திற்காய்
நீங்கள் வடிக்கும் அமிலமழை போல எம்மை
சாபமிடுவதாய் உணருகிறோம்

பலலட்சம் பேரின் கனவுகளை சிலஆயிரம் பேரில்
சுமத்திவிட்டு உம்மை அந்தரிக்க விட்டுவிட்டு
ஆறுதலாய் இருந்து விட்டோம் இப்போது
அடுத்த வேள்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்
ஆடுகளைத் தேடி பலியிடுவதற்காக

Saturday, September 26, 2009

இந்தளவும் போதும் எனக்கு
















முப்பது வருடங்களுக்கு மேலாய் செதுக்கிய தமிழீழச்சிலை
முள்ளியாய்க்காலோடு முற்றுப் பெறாமலே சிதைந்த போதும்
மீட்பருக்காய் காத்திருந்த இனம் இன்று
மீட்பர்களையே அழித்து விட்டு

கடைசித்துளி கண்ணீரொடு
காத்திருக்கிறது...
எப்படிச் சொல்ல அந்த இறுதி நாட்களை

கடைசிப் பிள்ளை கண்முன்னே
குண்டடிபட்டு இறந்து கிடக்கும் போதும்
காலால் உதறி விட்டு கால்நடையாய்ப்
போகிறேன் காலனின் வதைமுகாம் நோக்கி

என் மனுசியின் சதைத் துண்டங்களை
நாய்கள் தின்னும் போதும் சூ..என்று
கலைக்கத் திராணியற்று சூழ்நிலைக் கைதியாய்
சுருண்டு போய்க் கிடக்கின்றேன்

வந்த வழி எங்கிலுமே வாழ்விழந்த
மனிதர்களின் குருதிக் கடலில்
மீன்களாய் மிதக்கின்றன தமிழர் பிணங்கள்
கண்ட பின்னும் நடக்கிறேன் கால் போகும் திசை நோக்கி

போகுமிடம் சொர்க்கமில்லை எனத் தெரிந்தும்
போய்ப் பார்த்தேன் நரகத்தின் கொடுமைகளை
நம்மினம் அனுபவிப்பதைக் கண்டு
போயிருக்கலாம் என் மனைவி பிள்ளை போன இடத்துக்கே
போதுமடா சாமி எமக்கு இந்த வாழ்க்கை

கண் முன்னே அண்ணனை காடையர்
கூட்டம் இழுத்துச் செல்லும் போதும்
பக்கத்து வீட்டு அக்காவை பல ஓநாய்க் கூட்டம்
சேர்ந்து சிதைக்கும் போது அவள் கதறிய ஒலி காதில் கேட்டும்

கண் கட்டி வாய் பொத்தி
காதிருந்தும் கேட்காது
கையாலாகாத் தனமாய் இருந்த
காலமெல்லாம் போதுமைய்யா எமக்கு

நெல் விளைந்த பூமி எல்லாம் இன்று
தமிழர் பிணங்கள் எரிந்த சுடுகாடாய்
மண்ணை இழந்தோம் மக்களை இழந்தோம்
பொன்னை இழந்தோம் பொருளை இழந்தோம்

கண்ணான எம் தாய் தந்தை பிள்ளைகளை இழந்தோம்
இழப்பினில் வடிக்கும் இறுதிச் சொட்டு
கண்ணீரையும் இழந்தோம்
இன்னும் என்ன இருக்கு இழப்பதற்கு
இந்தளவும் போதும் எனக்கு...

Wednesday, September 2, 2009

உடைந்த இதயத்தின் இறுதி ஆசை..

















என்னவளே
விழியோடு பேசி விளையாடிச்சென்று
உயிரோடு உறைந்த உறவே
விதி போல என்னோடு விலகாது
நின்று உறவாட வந்த உயிரே
கனவோடு மட்டும் கலைந்து போகும்
கற்பனை உறவா நம் காதல்

கண்டதும் வாங்கி காலினில் மாட்டி
கழட்டிவிட்டுப் போகும் செருப்பா காதல்
கண்காணா விட்டாலும்
கணப்பொழுதும் உன் நினைவில்
காத்திருக்கும் காதலே என் காதல்

பிள்ளைத் தமிழோடு செல்லக் குரலெடுத்து
தெள்ளத் தெளிவாக தேன்மாரி பொழிந்த
என் பால்நிலாவே_உன்
செவ்வாய் உதிர்த்து சொல்வாய் திருமொழி
என் காதலன் நீ தான் என்று

நீ இல்லாது போனால்
இருட்டாகும் என் வாழ்க்கை
இது சத்தியம் என் ஆருயிரே
சொல்லாத சொல்லுக்குச்
சுதந்திரம் உண்டு_நான்
சொல்லிய சொல்லுக்கு
நிரந்தரம் உண்டு

என் நாளும் காப்பேன் என் வாக்கை
என் தந்தை மீதிது சத்தியம் அன்பே
ஏனோ என் பேனா கூட மை சிந்துகிறது
நான் ரத்தக் கண்ணீர் சிந்துவதை
தாங்காமல் தானோ_இல்லை
என் சோகம் சொல்லும்
வரிகளை எழுதும் கடைசி
எழுத்து இதுவென்று நினைத்தோ...

Tuesday, September 1, 2009

காதலின் வலியைச் சுமந்து...





என்னவளே
இருகரங்களுக்கிடையில் துடிக்கும்
மிருதங்கம் போல உன் சொற்களால்_என்
சின்ன இதயம் சிதறுண்டு போகுதடி

ஊனாய் உருக்கி என்
உள்ளத்தில் வைத்தேன் உன்னை_இன்று
ஊணுறக்கம் வெறுத்தேன் அன்பே
உன்னையே நினைத்தேன் உயிராய்

என் உயிர் உருகும் ஓசை ஏனோ
உனக்கு கேட்கலையே என்னுயிரே
ஏற்றி வைத்த தீபம் எரிந்து ஒளி கொடுக்கும்
என் காதல் தீபம் தன்னை அழித்து வாழ்வு கொடுக்கும்

இருவர் விழிகளும் சந்திக்கும் முன்னரே
என் கண்களுக்கு கண்ணீர் தான் பரிசு
இதயவீணையின் நரம்புகள் கூட
சுருதி மாறி இசை மீட்டுகிறது உன்னாலே

அழகாய்ச் சிரித்த நிலவு கூட
அனலாய்க் கொதிக்கிறது
அமைதியாய் இருந்த அலைகடல் கூட
ஆர்ப்பரிக்கிறது புயல்காற்றாய்

காதல் காயத்தை உண்டாக்கியவள்
காயத்திற்கு மருந்திடாமல் போன மாயமென்ன
உனக்கே உனக்காய் உயிர்வாழ
உலகத்தில் ஒரு ஜீவன் உண்டு அறிவாயோ கண்ணே

வெண்ணிலை பிடித்து முத்தமிடும் வயதில்
பெண்ணிலவாய் நீ வந்தால்
என் இனிய வாழ்வில் என்றும்
வசந்தம் வீசும் அன்பே


Wednesday, August 26, 2009

புலிப் போராளி ஒருவருக்கும்,ஜனநாயகவாதி எனக் காட்டிக்கொள்ளும் பத்தி எழுத்தாளர் ஒருவருக்கும் இடையிலான ஒரு கற்பனைப் பேட்டி.


ஒட்டுமொத்த புலிகள் சார்பாக இறுதிக் களத்திலிருந்து தப்பி வந்த போராளிக்கும், ஜனநாயகவாதிகள்,கல்விமான்கள்,ந
டுநிலைவாதிகள் என கூறுவோர்,
புலிஎதிர்ப்பாளர்கள் அனைவர் சார்பாகவும் பத்தி எழுத்தாளருக்குமிடையிலான கற்பனை பேட்டி.

எழுத்தாளர்_ இன்றைய இந்தஅவலநிலைக்கு புலிகள் தான் காரணம் என்கிறார்களே இது குறித்து உங்கள் கருத்து என்ன?

போராளி_ ஆம்.
புலிகள் செய்த மிகப்பெரிய தவறு தமிழ் மக்கள் சுதந்திரமாகவும்,நின்மதியாகவும் வாழவேண்டும் என்பதற்காய் எமது ஆசாபாசங்களைத் துறந்து இரவுபகல் பாராது காடுமேடெல்லாம்
நித்திரை கொள்ளாது கண்விழித்து காவலரணில் இருந்து எதிரி எம் நிலத்தை ஆக்கிரமிக்க கூடாது என்பதற்காயும் நீங்கள் நின்மதியாக நித்திரை கொள்ள வேணும் என்பதற்காய் நாம்
நித்திரை கூடக்கொள்ளாது உயிரை விட்டது தப்புதான். கடலில் மீன் பிடிக்கச்செல்லும் போது சிங்கள படையால் கொல்லப்படும் போது உங்களுக்கு காவலாயும்,அன்னை மண்ணை அந்நியன்
ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காய் தரையிலும் சண்டையிட்டும் சகலவழியிலும் தடையாய் இருந்த எதிரியை கரும்புலியாயும் வெடித்து பெத்த தாய்க்கே யாரென தெரியாத ஆக்களாய் போராடியது
தான் நாம் செய்த தவறு.

பெற்ற பிள்ளை கண்ணைக் குத்துது என்பதற்காய் எந்தத் தாயும் பிள்ளையை வெறுப்பதில்லை அதைப்போல எத்தனை துரோகங்களை எமக்கெதிராகச் செய்த போதும்
அத்தனை பேருமே எம் தமிழுறவுகளே என்று உங்கள் அனைவருக்காகவும் போராடியது தான் தவறு.

எழுத்தாளர்_ அப்படியென்றால் புலிகள் தவறு செய்யவில்லை என்கிறீர்களா?

போராளி_ இல்லை அப்படி நான் சொல்லவரவில்லை, வரலாற்றை எடுத்துப்பார்த்தால் மகாபாரதத்தில் கூட கொடைவள்ளல் கர்ணனை கொல்லவேண்டிய நிலையிலும் சரி,போர்க்களத்தில் பீஷ்மர்,துரோணர்
போன்றவர்களையும் அருச்சுனன் கொல்லவேண்டி வந்த போது அருச்சுனன் மனம் தளர்ந்து கிருஷ்ணரிடம் என்னால் அவர்களை எதிர்த்து போரிட முடியாது அங்கே நிற்பவர்கள் எனது குரு,
எனது உறவினர்கள்,நண்பர்கள் என்று சொன்ன போது கிருஷ்ணர் சொன்னது இதுதான். தர்மத்தைக் காக்க வேண்டும் எனில் சில சமயம் இப்படியான நல்லவர்களையும் கொல்ல வேண்டும் என்பதுதான்.
அதேபோல எம் மக்களின் விடிவிற்காயும்,சுதந்திர தமிழீழத்திற்காயும் அப்படியான சிலவற்றைச் செய்ய வேண்டி வந்தது அதற்கான சந்தர்ப்பங்களையும் அவர்களே உருவாக்கி விட்டார்கள்.
இது அவர்களின் துர்ப்பாக்கியமே.

எழுத்தாளர்_ ஈழப்போரின் இறுதி நாட்கள் குறித்தும்,முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கும் புலிகளின் தவறான முடிவுகள் தான் காரணம் என்கிறார்களே இது குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

போராளி_ ஈழப்போரின் இறுதிக் காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சிங்கள பேரினவாத படைகளால் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டனர்.
இறுதி ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட இருபதாயிரம் மக்களுக்கு மேலும் காயப்பட்ட மக்களும் புல்டோசரால் ஏற்றியும் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டு
மண்ணோடு மண்ணாக மக்கி போய்விட்டார்கள். அதை விட புலிகள் மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தார்கள் என்பதெல்லாம் வெறும்
புனைகதைகளே. மக்களை புலிகளிடம் இருந்து பிரிக்கவும் புலிகள் மீதான நல்லெண்ணத்தை சிதைப்பதற்காக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பிரச்சாரமே.

மக்கள் விரும்பியே எம்மோடு வந்தனர். புலிகள் அவர்களை வற்புறுத்தவில்லை, இறுதிக்காலங்களில் புலிகள் மக்களை வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு
செல்லச் சொல்லியும் மக்கள் இறுதிவரை எம்முடனேயே இருந்தனர். தவிர புலிகளினதும்,பிரபாகரனினதும் தவறு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனென்றால் மக்களுக்கான போக்குவரத்து பாதைகள் சகலதும் மூடப்பட்டு மிகப்பெரிய பொருளாதாரத்தடை எம் மக்கள் மீது விதிக்கப்பட்டு ஒருநேர
உணவு கூட இன்றி அடம்பன் கொடியைத் தின்று எம் மக்கள் இருக்கும் போது அவர்களை காக்க வேண்டியதே எம்முன் இருந்த மிகப்பெரிய தேவையாக
இருந்தது. அதனால் எம்மால் முடிந்த அத்தனை வழிகளிலும் மக்களை காத்தோம். காயமடைந்த மக்களுக்கெல்லாம் எமது மருத்துவப்போராளிகள் இடைவிடாது
சேவை செய்தனர். எம்மால் முடிந்தளவு கையிருபில் இருந்த பொருட்களைக் கொண்டு கஞ்சியாவது காச்சிக் கொடுத்தோம்.

மக்களுக்காக போராட்டமே தவிர புலிகளின் இருப்புக்காக போராட்டமல்ல அதனால் நாம் இறுதிக் கட்டத்தில் சில முக்கியமான முடிவுகளை
எடுக்க வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். மற்றும் படி நீங்கள் எல்லாரும் புலிகள் மீது சொல்லும் அவதூறுகளைப் போல புலிகள் என்றும் நடந்ததில்லை.
புலிகளும்,பிரபாகரனும் செய்த மிகப் பெரிய தவறு தமிழர்களை நம்பி போராட்டத்தை தொடங்கி இறுதிவரை போராடி வீரச்சாவடைந்தது தான்.
ஒவ்வொரு போராளியும் தன் மூச்சுள்ளவரை சிந்தித்தது ஒன்றே ஒன்றுதான் எம் மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டு சுதந்திர ஈழத்தில்
தமிழர் சொந்த பலத்தில் நிற்கவேண்டும் என்பது தான். இந்த அவலம் எம்மோடு முடிந்து போகட்டும் இனிவரும் எம் சந்ததியாவது சுதந்திரக்காற்றை சுவாசிக்க
வேண்டும் என்பது தான். அதற்காகத் தான் ஆயிரக்கணக்கான போராளிகள் தமது இன்னுயிரை ஈந்தார்கள். ஒவ்வொரு போராளிக்கு பின்னும்
ஒவ்வொரு கதைகள். தொலைந்தது மனிதம் மட்டுமல்ல ஒவ்வொருத்தரின் வரலாறும் தான்.

எழுத்தாளர்_ ஈழத்தில் இனி ஓர் ஆயுதப் போர் சாத்தியமாகுமா?

போராளி_ போராட்டத்தை தீர்மானிப்பது நாமல்ல எதிரி தான். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் இனி எந்த வழியில்
போராட்டம் சாத்தியமாகும் என்பதை விட தமிழர்கள் முதலில் ஒற்றுமையாக வேண்டும் இல்லையெனில் ஆயுதப்போராட்டமல்ல அகிம்சைப்
போராட்டம் கூட சாத்தியமாகாது. அதற்கு முதலில் தமிழர்கள் தமது பேதங்களை மறந்து ஒன்றிணைந்து எதிர்காலச் செயற்பாடுகளுக்காகத்
தம்மைத்தாமே தயார்ப்படுத்த வேண்டும். அதுவே இன்றுள்ள அவசரத்தேவை.

உங்களைப் போன்ற ஜனநாயகவாதிகளாலும்,சில கல்விமான்களாலும்,தமிழ்த்தேச�
��ய எதிர்ப்பாளர்களாலும் இப்படியான கேள்விகளும்,
தேவையற்ற ஆய்வுகளும் தான் செய்ய முடியுமே தவிர உருப்படியாக எதுவுமே செய்ய முடியாது. முடிந்தால் முட்கம்பி வேலிகளுக்கு பின் சிறை
பட்டிருக்கும் மூன்று லட்சத்துக்கு மேலான மக்களை விடுவித்து சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்துவிட்டு புலிகள் மீது குற்றம் சொல்லுங்கள்
யாரையும் சுட்டிக்காட்டுமுன் மூன்று விரல் உங்களைத்தான் சுட்டுது என்பதை மறந்து விடாதீர்கள்.

உங்களைப் போன்றவர்களாலும்,உங்கள் தலைவர்களாலும் சிங்கள்வனின் கு*** கழுவலாம்,காட்டிக்கொடுக்கலாம், ஏன் தும்பினியின்
இடுப்பிலை தமிழீழத்தைக் காட்டலாம் ஆனால் எதுவுமே என்றைக்கும் செய்ய முடியாது. முடிந்தால் செய்து விட்டு புலிகள் மீது குறை சொல்லுங்கள்.
நீங்களும் படுக்க மாட்டீர்கள் படுக்கிறவனையும் விடமாட்டீர்கள் எனில் இது யார் குற்றம்?

Saturday, August 15, 2009

தந்தியறுந்த வீணை








வானத்து வெண்ணிலவொன்று
வையகம் வந்து பெண்ணவளானதோ
வட்டமுகத்தில் சிறு பொட்டொன்று வைத்து
என் வாசலில் வந்ததோ
என் வாழ்க்கை என்றதோ

அவள் கட்டழகு என் கண்களை
கொள்ளை அடித்துச் சென்றதோ
என் எண்ணங்களின் மொத்த
வண்ணமாய் என் முன் நின்றாள்
என் அழகு தேவதை

என் எண்ணத்தில் உதித்த
வண்ணத்துப் பூச்சி அவள்
எனக்கும் அவளுடன் சிறகு விரிக்க ஆசை
இருந்தும்சிறகொடிந்த பறவை நான்

அன்னை தந்தையின் அன்புக்கும்
அண்ணா அக்காவின் பாசத்திற்கும்
அடிமையாகி உரைத்து விட்டேன்
சத்தியமா யாரையும் காதலிக்க மாட்டேன் என

காதலையும் சொல்ல முடியாது
காதலி நினைவையும் மறக்க முடியாது
கணப் பொழுதும் செத்துப் பிழைக்கிறேன்
மழைத்துளி மண்ணில் விழுந்து உடைவது போல
தினம்தினம் உடைந்து சுக்கு நூறாய் போகிறேன்

காதலுக்கும் பாசத்துக்கும் இடையில்
இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறேன்
காதலுக்காக பாசத்தை விடவா இல்லை
பாசத்திற்காக காதலை விடவா
கடவுளுக்கு தான் கருணை மனு எழுதுகிறேன்

என் இதயத்தை தொலைத்து விட்டு
இருட்டினில் தேடுகிறேன்
இஸ்டமில்லாமல் வாழவும் முடியவில்லை
இறந்து போகவும் மனமில்லை

இறைவா எனக்கொரு வழி சொல்லு_இங்கு
தந்தியறுந்த வீணை ஒன்று
தனியாய்க் கிடக்கிறது
மீட்டுவார் யாருமின்றி.