Saturday, September 26, 2009
இந்தளவும் போதும் எனக்கு
முப்பது வருடங்களுக்கு மேலாய் செதுக்கிய தமிழீழச்சிலை
முள்ளியாய்க்காலோடு முற்றுப் பெறாமலே சிதைந்த போதும்
மீட்பருக்காய் காத்திருந்த இனம் இன்று
மீட்பர்களையே அழித்து விட்டு
கடைசித்துளி கண்ணீரொடு
காத்திருக்கிறது...
எப்படிச் சொல்ல அந்த இறுதி நாட்களை
கடைசிப் பிள்ளை கண்முன்னே
குண்டடிபட்டு இறந்து கிடக்கும் போதும்
காலால் உதறி விட்டு கால்நடையாய்ப்
போகிறேன் காலனின் வதைமுகாம் நோக்கி
என் மனுசியின் சதைத் துண்டங்களை
நாய்கள் தின்னும் போதும் சூ..என்று
கலைக்கத் திராணியற்று சூழ்நிலைக் கைதியாய்
சுருண்டு போய்க் கிடக்கின்றேன்
வந்த வழி எங்கிலுமே வாழ்விழந்த
மனிதர்களின் குருதிக் கடலில்
மீன்களாய் மிதக்கின்றன தமிழர் பிணங்கள்
கண்ட பின்னும் நடக்கிறேன் கால் போகும் திசை நோக்கி
போகுமிடம் சொர்க்கமில்லை எனத் தெரிந்தும்
போய்ப் பார்த்தேன் நரகத்தின் கொடுமைகளை
நம்மினம் அனுபவிப்பதைக் கண்டு
போயிருக்கலாம் என் மனைவி பிள்ளை போன இடத்துக்கே
போதுமடா சாமி எமக்கு இந்த வாழ்க்கை
கண் முன்னே அண்ணனை காடையர்
கூட்டம் இழுத்துச் செல்லும் போதும்
பக்கத்து வீட்டு அக்காவை பல ஓநாய்க் கூட்டம்
சேர்ந்து சிதைக்கும் போது அவள் கதறிய ஒலி காதில் கேட்டும்
கண் கட்டி வாய் பொத்தி
காதிருந்தும் கேட்காது
கையாலாகாத் தனமாய் இருந்த
காலமெல்லாம் போதுமைய்யா எமக்கு
நெல் விளைந்த பூமி எல்லாம் இன்று
தமிழர் பிணங்கள் எரிந்த சுடுகாடாய்
மண்ணை இழந்தோம் மக்களை இழந்தோம்
பொன்னை இழந்தோம் பொருளை இழந்தோம்
கண்ணான எம் தாய் தந்தை பிள்ளைகளை இழந்தோம்
இழப்பினில் வடிக்கும் இறுதிச் சொட்டு
கண்ணீரையும் இழந்தோம்
இன்னும் என்ன இருக்கு இழப்பதற்கு
இந்தளவும் போதும் எனக்கு...
Subscribe to:
Post Comments (Atom)
உங்கள் தளம் அழகாக உள்ளது
ReplyDeleteவாழ்த்துகள்
பதிவும் நல்லது கவலையாக உள்ளது
நன்றி தியா உங்களை போன்றவர்களின் உற்சாகம் தான் எழுதத்தூண்டுகிறது...எம்மில் ஒவ்வொருவரிடமும் எத்தனை எத்தனை கவலைகள்,கருப்பொருட்கள் உண்டு..
ReplyDeleteஅத்தனையும் எழுதின்.........
கடைசிப் பிள்ளை கண்முன்னே
ReplyDeleteகுண்டடிபட்டு இறந்து கிடக்கும் போதும்
காலால் உதறி விட்டு கால்நடையாய்ப்
போகிறேன் காலனின் வதைமுகாம் நோக்கி//
மனம் கணக்கிறது...
//வந்த வழி எங்கிலுமே வாழ்விழந்த
மனிதர்களின் குருதிக் கடலில்
மீன்களாய் மிதக்கின்றன தமிழர் பிணங்கள்
கண்ட பின்னும் நடக்கிறேன் கால் போகும் திசை நோக்கி//
வலியின் பதிவு...
//கண் முன்னே அண்ணனை காடையர்
கூட்டம் இழுத்துச் செல்லும் போதும்
பக்கத்து வீட்டு அக்காவை பல ஓநாய்க் கூட்டம்
சேர்ந்து சிதைக்கும் போது அவள் கதறிய ஒலி காதில் கேட்டும்//
வேதனையின் உச்சம்...
துயர் கவிதை...மனதை அழுத்துகிறது.... வேரென்ன சொல்ல?