Wednesday, November 25, 2009

கண்ணீரில் கரையும் கல்லறை தெய்வங்கள்





கருக்கொள்ளும் போதே கல்லறைத்
தெய்வங்களாகக் கடவது என
காலன் சொன்னானோ என்னவோ
கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற
காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில்
வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி

கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து
கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை
காசுக்காக விற்றுவிட்டு உங்கள்
கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும்
கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம்
இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும்
சிறு கடுகளவேனும் கருணை கொண்டு

கார்த்திகைப் பூக்களை காலால் நசுக்குவது போல்
கல்லறை தெய்வங்களையும் சிறு
கணப் பொழுதுடன் மறந்துவிடுகிறோம் எம்
களியாட்டங்கள் தொடர்வதற்காய்

விளக்கிலே பட்டு வீழ்ந்துபோகும்
விட்டில்கள் போல உங்கள்
வீரம் விளைந்த விடுதலை வேட்கையும்
வீணர்களால் வீணாய்ப் போய்விட்டதே

உங்கள் பாதம் பட்டு சேதிகள் சொன்ன
பற்றைக்காடுகள் கூட பாசறைப் புலிகளின்
பரிதாபங்கண்டு இரங்கற்பா இசைக்கும்
இதயம் கனத்து...

எங்குபோய்த் தேடுவது எம் குலவிளக்குகளை
கார்த்திகை நாளில் காற்றுக் கூட
கானமிசைக்கும் எம் மாவீரர் நினைவைச் சுமந்து
ஆறுமணிக்கு ஒலிக்கும் ஆலய மணியின் ஓசையில்
உம் ஆன்மாக்களின் துடிப்பு நாதமாய் கேட்கும்

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்
பேழைகளே பாடல் ஒலிக்கும் போது உயிரைப் பிழியும்
வலியை உணர்ந்தோம் உங்களுக்காய் ஏற்றப்படும்
ஒவ்வொரு தீபமும் எம் உள்ளத்தை உருக்கி
நெருப்பாக்கும் உண்மையை உணர்ந்தோம்

உங்கள் துயிலுமில்லத்தில் பொழியும் மழைகூட
உங்கள் கண்ணீராய் உணர்ந்தோம் அதுவே
எம்மை ஆசீர்வதிப்பதாய் நினைத்தோம் இன்று
அதே மழை நாங்கள் செய்த பாவத்திற்காய்
நீங்கள் வடிக்கும் அமிலமழை போல எம்மை
சாபமிடுவதாய் உணருகிறோம்

பலலட்சம் பேரின் கனவுகளை சிலஆயிரம் பேரில்
சுமத்திவிட்டு உம்மை அந்தரிக்க விட்டுவிட்டு
ஆறுதலாய் இருந்து விட்டோம் இப்போது
அடுத்த வேள்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்
ஆடுகளைத் தேடி பலியிடுவதற்காக

No comments:

Post a Comment