Monday, July 20, 2009

பூனைக்கு யார் மணி கட்டுவது?

கடந்த முப்பது ஆண்டுகாலப் போராட்டம் முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரோடு ஆயுதரீதியாக அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான போராளிகளினதும்,இலட்சக்கணக்கான மக்களின் சாவுகளுடன் முடிந்துள்ளது. இன்று மூன்றுலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வவுனியா மெனிக்பாம் முகாமில் நாசிகளின் வதை முகாம் போன்ற முகாம்களில் அடைக்கப்பட்டு அடிப்படைத்தேவைகளைக்கூட பூர்த்திசெய்ய முடியாத சூழலில் கழிவறைக்குச் செல்வதுமுதல் சகலதுக்கும் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
அந்த மக்களின் அவலங்களைப்போக்க சர்வதேச அரச,அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட முகாம்களுக்குச் சென்று உதவிபுரியமுடியாதபடி அரசாங்கம் மறுப்புத்தெரிவித்து வருகிறது. ஜ.நா அமைப்பின் உறுப்பினர்கள்கூட நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க முடியாத சூழல் இருந்தும் ஜ.நாவும் ஏனையநாடுகளும் மௌனமாக இருந்துகொண்டு கண்துடைப்புக்கு சில அறிக்கைகள் விடுகின்றனவே தவிர ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.


ஏற்கனவே புலிகளை அழிப்பதற்கு நேரடியாக துணைநின்ற இந்தியா,சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளும் மறைமுகமாக உதவிய ஜ.நா உள்ளிட்ட மேற்கைத்தேச நாடுகள் சிலவும் இன்று இவ்வளவு மனிதப்பேரவலம் நடந்துமுடிந்த பின்பும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது தமிழ்மக்களிடையே ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. போர்க்குற்றவாளிகளைத்தண்டிக்காது விட்டும்,பாதிக்கப்பட்ட வன்னிமக்களுக்கு உதவிகள் கூட சீராக சென்றடையமுடியாத கையறு நிலையிலேயே இன்று சர்வதேச சமூகம் உள்ளது.
ஜசிஆர்சி போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகள் கூட இலங்கையில் வரையறுக்கப்பட்டுள்ளதோடு ஜசிஆர்சி கூட பாதிக்கப்பட்ட மக்களுக்காக புலம்பெயர்மக்களால் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பல் நிவாரணப்பொருட்களை அந்த மக்களிடம் சேர்ப்பதற்காக பணம்கோரியவிடயம் தமிழர்களைப் பொறுத்தவரை இவர்கள் மீதும்,இவர்களின் செயற்பாடுகளின் மீதும் அவநம்பிக்கையையே ஏற்படுத்துகிறது. அதாவது இலங்கை அரசின் தமிழ்மக்களுக்கு எதிரான் இராணுவ நடவடிக்கைகளுக்கு சர்வதேசசமூகம் உதவியதன் மூலம் சர்வதேசம் தமது சொந்தநலன்களில் அக்கறை காட்டுதே தவிர தமிழர்கள் மீதான் அனுதாபத்தில் அல்ல. அதாவது புலிகளை அழித்துவிட்டு தாம் விரும்பும் தமது நலன் சார்ந்த ஒரு தீர்வுத்திட்டத்தை தமிழர்கள் மீது திணிப்பதே இந்தியா உட்பட்ட சிலநாடுகளின் நோக்கமாகும் ஆனால் அவற்றைக்கூட இலங்கை அரசு ஏற்கும் அல்லது தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத்தீர்வை வழங்கும் என்பதும் கேள்விக்குறியே?

நிலமை இவ்வாறு இருக்க தமிழ் ஊடகங்கள் தமிழ்மக்களின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஆதாரமாக இருப்பதை விடுத்து தேசியத்தலைவர் இருக்கிறாரா?இல்லையா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதுடன் மக்களை மேலும்மேலும் குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப்போன்ற ஒரு கேள்விதான். இது ஒரு நம்பிக்கை சார்ந்த விடயமாகவே இன்றைய நிலையில் இருக்கிறது. தலைவர் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் தலைவர் என்றோ ஒருநாள் வருவார் என்ற நம்பிக்கையுடன் அடுத்தகட்டப்பணிகளைச் செய்யவேண்டும் தலைவர் இல்லை என்று நம்புவர்கள் தலைவர்காட்டிய வழியில் சென்று எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காய் உழைப்பதே சிறந்தது. அதற்காக தலைவர் மாவீரர்நாளுக்கு வருவார்,அப்பவருவார்,இப்பவருவ
ார் என்று நாள் பார்த்து நம்புவது ஆரோக்கியமானதா என்பது சிந்திக்க வேண்டியதே. ஏனென்றால் அகதிமுகாம்களில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்களும்,கிட்டத்தட்ட பத்தாயிரம் போராளிகளும் இருக்கும் போது தலைவர் வந்தால் கூட அங்கிருக்கும் இளைஞர்,யுவதிகளை சிங்கள அரசு கொன்று குவித்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவேளை தலைவர் இருந்து வருவதாக இருந்தால் கூட அது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின்னரே இருக்கும்.
அதற்காகவேனும் நாம் எம் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காய்
ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும். இதற்கு ஊடகங்களின் பங்கு என்பது மிகமிக முக்கியமானதாகும்.

ஏனெனில் போர்க்காலத்திலும் அதற்குப் பின்னான தற்போதைய நிலையிலும் சிங்கள ஆங்கில ஊடகங்களின் பங்கை நாம் நோக்கினால் அவைகள் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்ற போதும் போர்பற்றிய அதிதீவிர பிரச்சாரத்தைச் செய்து போர்வெற்றி மயக்கத்துக்குள்ளேயே சிங்கள மக்களை வைத்திருந்தார்கள். இது மஹிந்தகூட்டணியின் தமிழின அழிப்பை மறைக்க உதவுவதோடு நாட்டின் பொருளாதாரவீழ்ச்சி,விலைவாசி உயர்வு பற்றி மக்கள் சிந்திக்காது போர் வெற்றி குறித்த செய்திகளின் மூலம் அரசுக்கான ஆதரவை திரட்டியதில் சிங்கள ஊடகங்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.

தமிழர்களைப் பொறுத்தவரை சிங்கள அரசு தமிழருக்கு எந்த ஒரு தீர்வையும் தரப்போவதில்லை என்பது நன்றாகத்தெரியும் இது அரசுடன் சேர்ந்தியங்கும் கட்சிகளுக்கும் நன்கு தெரியும் தவிர சொந்த சின்னத்தில் போட்டியிடக்கூட முடியாதவர்களால் தமிழர்களுக்கு ஒரு தீர்வைப்பெற்றுத்தர முடியும் என்று நினைத்தால் அது கானல்நீரே! ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரை தமிழ்மக்களால் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாகும். எனவே தாயகத்தைப்பொறுத்தவரை இவர்கள் தான் இன்றைய அவலநிலையைப்புரிந்து செயற்படவேண்டும். தவிர புலம்பெயர்மக்களைப் பொறுத்தவரை ஒரு தீர்க்கமான முடிவெடுத்து உதாரணத்துக்கு நாடுகடந்ததமிழீழ அரசை,புறநிலைஅரசை அமைப்பது குறித்தோ அல்லது வேறு மார்க்கத்தை தெரிவு செய்தோ அந்த ஒருநிலைப்பாட்டிலேயே உறுதியாக நின்று அதற்காகவே உழைக்கவேண்டும். இதில் ஊடகங்களின் பங்கு என்பது மிகமிக முக்கியம் தேவையற்ற வாதங்களைத்தவிர்த்து குறித்த இலக்குக்காக (சிங்கள ஊடகங்கள் போல) அதையே திரும்பத்திரும்ப வலியுறுத்துவதன் மூலம் அனைவரையும் ஒன்றிணைத்து ஒருகுடையின்கீழ் செயற்படவைக்க முடியும். இதுதான் மாண்ட வீரர்களுக்கும்,மக்களுக்கும் செய்யும் பிராயச்சித்தமாக இருக்கும். இன்று யுத்தக்களிப்பில் தலைகால் புரியாது தமிழரை அடிமையாக்கியதாக நினைக்கும் சிங்கள பௌத்த பேரினவாத பூனைக்கு யார் மணிகட்டுவது இதுதான் இன்றுள்ள கேள்வியாகும்??.

1 comment:

  1. இன்று எமக்கு முன் உள்ள கடமை ஒன்று பட்டு உழைப்பது ., நம் இனத்தின் விடுதலைக்கு. பாடு பட்டவர்களுக்கு ,நாம் செய்யவேண்டிய கடமை .அகதிகளாக முட்கம்பிகளுக்கு பின்னால் உள்ளவர்களின் விடுதலை. அடிப்படை உதவி இல்லாமல் கஷ்டபடுகிறார்கள் . அத்தற்காக ,நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் புலம் பெயர் உறவுகளை நம்பி இருக்கிறார்கள். நம் இனத்தை நாம் காப்போம்.

    ReplyDelete