
பூத்திருந்த பாவையரும்
காத்திருந்த காளையரும்
கடிமணம் கொண்ட காலம் என்னவோ
கம்பன் காலம் தான்_இன்று
இருமனங்கள் இணைவதல்ல
இருபணங்கள் இணைவதே திருமணம்
அம்மிமிதித்து
அருந்ததி பார்க்கும் திருமணத்தின்
அரங்கேற்றம் என்னவோ
அஞ்சாறு மில்லியனில் தான்
மண்டபம் எடுத்து மணவறை கட்டி
மாப்பிள்ளைக்கு பட்டுவேட்டி கொடுத்து
மாற்று மோதிரம் கொடுத்து
முப்பதுபவுண் தாலி கூறையுடன்
மூக்குமின்னிவரை பெண்பெற்றவர் கொடுத்து
முடிந்தால் மோட்டார் வண்டியும் கொடுத்து
மாலையிட வேண்டும் மங்கைக்கு
இத்தனையும் செய்திட பெற்றவர்கள்
சிந்துவது வியர்வையல்ல ரத்தமே
எத்தனை ஆண்களுக்கு தெரியும்
திருமணச் சந்தையில் விலைபோகும்
கடாக்கள் தான் நாம் என்று...
அதிகம் படித்தால் அதிகம் சீதனம்
அளவாய் படித்தால் கொஞ்சம் சீதனம்
அடிமாட்டு விலைக்கு போகும் ஆண்கள்
ஆணிடம் கேட்டால் அம்மா,அப்பா விருப்பமாம்
அறிவுகூட மூலதனம் தான் திருமணத்தில்...
எத்தனை பெண்கள் சீதனம் எனும்பெயரில்
முப்பது வயதைத் தாண்டியும்
முதிர்கன்னிகளாய்...
இவர்களின் வாழ்விலும் வசந்தம்வீசுமா
இளையவர்களேனும் சிந்தியுங்கள்!
No comments:
Post a Comment